மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா – மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ஆலோசனை
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவாக தொடர்ந்து இரண்டு நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த பிரச்சினை மூன்றாவது நாளாகவும் நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கியது. இதையடுத்து, நீட் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தது.இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.விவாதத்திற்கு சம்மதிப்பதற்கு முன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளி நீடித்துக் கொண்டிருந்த நிலையிலேயே அமித்ஷா, ஓம் பிர்லாவை சந்தித்து பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கு முன்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஓம் பிர்லாவை சந்தித்திருந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சௌகதா ராய் மற்றும் மஹுவா மொய்த்ராவும் உடனிருந்தனர்.கேள்வி நேரத்தின்போது, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்த விவாதம் எந்த தேதியில், எவ்வளவு நேரம் நடைபெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க தம்மை சந்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.