போராட்டக்காரர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது; அரசு உறுதி அளித்துள்ளது - சோனம் வாங்சுக்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு உயர்கல்வித் துறையில் சீர்திருத்தங்களை கோரி 26 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்தார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார்.போராட்டத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே, தனது சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட சோனம் வாங்சுக், மத்திய அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உறுதிமொழியையும் பகிர்ந்துள்ளார். அதில், டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களும், கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டவர்களும் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சோனம் வாங்சுக் வெளியிட்ட பதிவில், அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், அவரது 26 நாள் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல முக்கிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளது.
அதன்படி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், தேர்வு முறையில் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் அரசு சாதகமான பரிசீலனையில் இருப்பதாக அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.