பொதுத்துறை வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகளை இயக்க வேண்டும், ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய 3 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். வார இறுதி விடுமுறையுடன் தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற இருந்ததால், வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற சூழல் உருவானது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், செப்டம்பர் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வேலைநிறுத்தத்துக்கு முன்பாகவே முக்கியமான வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறுத்தின. பணம் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். மையங்கள், இணைய வங்கி சேவை மற்றும் யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டன. இதையடுத்து பல பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்திருந்தன. ஆனால், வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அது திடீரென திரும்பப் பெறப்பட்டது. இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான யு.எப்.யு.யு. இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
Advertisement
அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக மாற்றுவது தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்து முடிவு செய்ய உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அதேபோல், வங்கி அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ.யில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது. பிற கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க இரு தரப்பும் சம்மதித்தன. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்ட போராட்டங்கள் மற்றும் 3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் செப்டம்பர் 28-ந்தேதி நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதற்கிடையே, பொதுத்துறை வங்கிகள் இனி சனிக்கிழமைகளில் செயல்படாது என்றும், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும் என்றும் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நடைமுறை இந்த வாரம் முதலே அமலுக்கு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை என்ற தகவல் **வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது**. இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட தகவலில், மத்திய நிதி அமைச்சகம் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்பட்டதாக பரவி வரும் செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.