மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகச் சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி மூலம், தொடர்புகளின் விவரங்களை ஒரே இடத்தில் பார்ப்பதுடன், ஆன்லைனில் இருப்பவர்களையும் எளிதாக அடையாளம் காண முடியும். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் குரல், வீடியோ அழைப்புகள் எனப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இச்செயலியில் அவ்வப்போது புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பேஸ்புக்கில் இருப்பதைப் போன்ற தனி ‘காண்டாக்ட்ஸ்’ (Contacts) டேப் வசதியை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் செயலியில் உள்ள தொடர்புகளை ஒரே பகுதியில் அணுக முடியும். தற்போது ஆன்லைனில் இருக்கும் நபர்களின் புரொபைல் படத்திற்கு அருகே பச்சை நிறப் புள்ளி இடம்பெறும். இதனால் யார் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ளலாம்.
Advertisement
மேலும், பெயர், மொபைல் எண் அல்லது பயனர்பெயரை உள்ளீடு செய்து தொடர்புகளைத் தேடும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது. ஆன்லைனில் இருப்பவர்களை முதலில் காணும் வகையிலும், தொடர்புகளைப் பெயர் வரிசையில் பார்வையிடும் வகையிலும் பட்டியலை ஒழுங்குபடுத்த முடியும். இதுமட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்தநாளை நினைவூட்டும் அம்சமும் இந்தப் புதிய வசதியில் சேர்க்கப்பட உள்ளது. மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகளின் பிறந்தநாள் விவரங்களின் அடிப்படையில், ஒருவருக்குப் பிறந்தநாள் வரும்போது கேக் எமோஜியுடன் ‘இன்று பிறந்தநாள்’ என்ற அறிவிப்பு காட்டப்படும். இதன் மூலம் முக்கியமானவர்களின் பிறந்தநாளைத் தவறவிடாமல் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். தற்போது உருவாக்கும் நிலையில் உள்ள இந்த வசதியை, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.