பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த அமர்வில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் தொடர்பான திருத்த மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு சட்ட திருத்த மசோதா மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா உள்ளிட்ட ஆறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், கூட்டத்தொடரின் முதல் நாளில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.இந்த சூழலில், 'மங்கள் மிலன்'என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டிடத்தின் ஜி.எம்.சி.
பாலயோகி கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம், ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது" என்று மட்டும் கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கிய மசோதாக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.