பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பொறுப்பு
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் அமைப்பு ரீதியான முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக துணைத் தலைவர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு நிதின் நபின் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், புதிய நிர்வாக அமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 13 பேர் துணைத் தலைவர்களாகவும், 8 பேர் தேசிய பொதுச் செயலாளர்களாகவும், 16 பேர் தேசிய செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய நியமனங்களில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு பெண்கள் துணைத் தலைவர்களாகவும், நான்கு பெண்கள் செயலாளர்களாகவும், ஒருவர் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.துணைத் தலைவர்களாக உத்தரகாண்டைச் சேர்ந்த திரத் சிங் ராவத், குஜராத்தைச் சேர்ந்த வர்ஷாபென் நரேந்திரபாய் தோசாய், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பார்தி பிரவின் பவார், பஞ்சாப்பைச் சேர்ந்த சர்தார் மன்பிரீத் சிங் பாதல் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மதுசந்திரா கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேசிய இணை அமைப்புப் பொதுச் செயலாளர்களாக திரிபுராவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப், குஜராத்தைச் சேர்ந்த ஜக்தீஷ் ஐஸ்வர்பாய் படேல் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த பங்னோன் கோன்யாக் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.தேசிய அலுவலகச் செயலாளராக மகேந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.