பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செப் தாமு மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், செப் தாமுவின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சமையல் துறையில் தனித்துவமான திறமையால் முத்திரை பதித்த செப் தாமு, தனது எளிமையான அணுகுமுறையின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக சமையல் கலையைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர் என நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement
அவரது திறமைக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செப் தாமுவின் மறைவு சமையல் துறைக்கும், அவரை நேசித்த மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், மறைந்த செப் தாமுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.