பஞ்சாப்பில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எதிராகப் போராடி வந்த தன்னார்வலர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த பர்வீந்தர் சிங் என்ற ஜோட்டா, மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கத் தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில், ஒரு மருந்துக் கடையில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சிலருடன் அந்தக் கடைக்குச் சென்ற ஜோட்டா, அங்கு விற்பனை தொடர்பாகக் கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தையும் அவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
Advertisement
அப்போது, கடை உரிமையாளர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஜோட்டாவை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த ஜோட்டா, உரிமையாளர் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுப்பதாகக் கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஜோட்டா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.