நீலகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோத்தகிரி வட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராமத்துக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்கள், அத்தியாவசியத் தேவைகளுக்காக மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தீவிர கனமழையால் திங்கட்கிழமையான இன்று ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் அபாய அளவைத் தாண்டி செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காகக்கூட கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர். இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
Advertisement
மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் உள்ள பர்லியாறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பெரிய நிலச்சரிவில் சிக்கி, அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் (51) உயிரிழந்தார். மேலும், குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம்–குன்னூர் மலைப்பாதையில் நிலச்சரிவுகளை அகற்றும் பணிகள் முடியும் வரை, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் நீலகிரி மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 1077 அல்லது 0423-2450024 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், மழை நிலைமை சீரடையும் வரை தேவையற்ற மலைப்பாதைப் பயணங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.