நீட் விவகாரத்தில் ஆட்சியாளர்களை நம்புவது ஏமாற்றம்; இயக்குநர் அமீர் விமர்சனம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆட்சியில் இருப்பவர்கள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் வரை போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.நீட் முறைகேடுகளை எதிர்த்து டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.வடஇந்தியாவில் ஆலியா பட், சல்மான் கான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நீட் விவகாரத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்த நிலையில், தென்னிந்தியாவில் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் நேரடியாக போராட்டங்களில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜ் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் வாயிலாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இந்த நிலையில், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.