நிலவில் இதுவரை கவனிக்கப்படாத மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எல்.ஆர்.ஓ. விண்கலம் பதிவு செய்துள்ளதுடன், நிலவின் மேற்பரப்பு தொடர்பான பல ஆச்சரியமான தகவல்களையும் கண்டறிந்துள்ளது. பூமியின் துணைக்கோளான நிலவு பல ஆண்டுகளாக உலக நாடுகளின் விண்வெளி ஆய்வுகளின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. நிலவை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2009-ம் ஆண்டு எல்.ஆர்.ஓ. விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் தொடர்ந்து நிலவின் பல்வேறு பகுதிகளைப் படம்பிடித்து தகவல்களை அனுப்பி வருகிறது. அவ்வகையில், 2024-ம் ஆண்டு மே மாதம் எல்.ஆர்.ஓ. அனுப்பிய புகைப்படங்களில் ஒன்றில் பதிவாகியிருந்த முக்கிய தகவல் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏராளமான புகைப்படங்கள் குவிந்திருந்ததால், அந்தப் படத்துக்கு 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பெரிய அளவில் கவனம் கிடைக்கவில்லை. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2024-ம் ஆண்டு நிலவில் வால் நட்சத்திரம் அல்லது குறுங்கோள் ஒன்று மோதியதன் காரணமாக புதிய பள்ளம் உருவாகியிருப்பது தெரியவந்தது. இந்த மோதலை பூமியிலிருந்தோ விண்வெளியிலிருந்தோ செயல்பட்ட தொலைநோக்கிகளால் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், எல்.ஆர்.ஓ. எடுத்த புகைப்படம் இந்த நிகழ்வின் தடயத்தை பதிவு செய்திருந்தது. புதிதாக கண்டறியப்பட்ட இந்தப் பள்ளம் ரோமன் கொலோசியத்தைவிட பெரியதாக உள்ளது. சுமார் 728 அடி அகலமும் 141 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், சமீப காலங்களில் சூரிய குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பெரிய மோதல் நிகழ்வுகள் சுமார் 132 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு தசாப்தத்துக்கு முன்பு எல்.ஆர்.ஓ. கண்டறிந்த சாதனை அளவிலான பள்ளத்தைவிட, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம் மூன்று மடங்கு பெரியதாகும். ஹூஸ்டன் நிலவு மற்றும் கோள் மையத்தின் முன்னாள் இயக்குநரும் மறைந்த விஞ்ஞானியுமான தாமஸ் மெக்கெட்சின் பெயர் இந்தப் புதிய பள்ளத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. நிலவில் ஏற்பட்ட இந்த மோதலின் தாக்கத்தால் தூசி மற்றும் பாறைத் துகள்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பல்வேறு பகுதிகளுக்கு சிதறியுள்ளன.
Advertisement
அவை சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு வரை பரவியிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், புதிய பள்ளத்தைச் சுற்றி சுமார் 7 கிலோமீட்டர் அகலத்தில் குளிர்ச்சியான பகுதி உருவாகியிருப்பதும் மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பு குறித்த புதிய தகவல் 2009-ம் ஆண்டு ஏவப்பட்ட எல்.ஆர்.ஓ. விண்கலம் மற்றொரு முக்கிய தகவலையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை அறியப்பட்ட கருத்துகளுக்கு மாறாக, நிலவின் மேற்பரப்பில் உள்ள மண், சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் உள்பகுதியில் இருந்து உருவாகும் விசையின் காரணமாக ஏறத்தாழ ஓர் அங்குலம் அளவுக்கு புரட்டிப் போடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்.ஆர்.ஓ. கேமராக்களின் ஆய்வை வழிநடத்தும் தலைமை விஞ்ஞானி மார்க் ராபின்சன் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு, அப்பல்லோ விண்வெளி வீரர்கள் நிலவில் பதித்த காலடித் தடங்கள் நீண்ட காலத்துக்கும் அழியாமல் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு முரணான தகவலை வழங்குவதாக அவர் கூறியுள்ளார். நிலவின் உள்பகுதியிலிருந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் விசையின் தன்மை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இனி விரிவாக கணக்கிட வேண்டியது அவசியம் என்றும் ராபின்சன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நிலவில் கட்டமைப்புகளை உருவாக்கும் நாசாவின் திட்டத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதையும், சாத்தியமான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின் மூலம், நிலவில் ஏற்படக்கூடிய தாக்கங்களைத் தாங்கும் வகையில் வலுவான கட்டமைப்புகளை பொறியாளர்கள் உருவாக்க முடியும் என்றும் ராபின்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்க விண்வெளி வீரர்களுக்காக நிலவில் கட்டமைப்புகளை அமைக்கும் திட்டத்தில் நாசா தயாராகி வரும் நிலையில், இந்த புதிய தகவல்களும் முக்கியமான ஆய்வு தரவுகளாகக் கருதப்படுகின்றன.