நிலவரி ரத்து; 20 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த 3.5 லட்சம் காலிப் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகிலேயே அரசு சேவைகளைப் பெறும் வகையில், சென்னையில் முதற்கட்டமாக ரூ.1.02 கோடி செலவில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் விரைவாக வழங்கும் நோக்கில், விண்ணப்பங்களை மூன்று அலுவலர் நிலைகளில் பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பட்டா பெயர் மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், பத்திரப்பதிவு செய்யப்பட்டவுடன் தானாகவே பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் 45 சதவீத பதிவுகள் இந்த முறையில் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.