நாடு முழுவதும் நாளை மெழுகுவர்த்தி பேரணி; காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சர்ச்சை நாடு முழுவதும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், கடந்த ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடுநிலையான இடத்தில் நடைபெற வேண்டும் என்ற சிஜேபியின் கோரிக்கையைத் தொடர்ந்து இது இரண்டாவது சுற்று சந்திப்பாக நடைபெற்றது. தங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சிஜேபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், 'நீட்' தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நாளை மாலை நாடு முழுவதும் மாவட்ட அளவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
வேணுகோபால் வெளியிட்டுள்ள கடிதத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் வழிகாட்டுதலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை மாலை மெழுகுவர்த்தி பேரணி மற்றும் சத்தியாகிரக போராட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த சத்தியாகிரகம், மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மகாத்மா காந்தி அல்லது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை நோக்கிச் செல்லும் பேரணியுடன் நிறைவடைய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வு முறையின் நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கத் தவறியதாகக் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பேரணியில் வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் தனது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.