நவம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் சீருடை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வரும் நவம்பர் 15-ந்தேதி முதல் பணிநேரத்தில் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சீருடையின் நிறங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஊழியர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சீருடைக்கான துணி கொள்முதல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பணிகளில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, சீருடைக்கான தொகை வழங்கப்படும் முறையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.