நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை: அதிகப்படியான செல்போன் பயன்பாடு குறித்து எச்சரிக்கை
பிரபல நடிகை ஷகிலா, கழுத்து நரம்பில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புக்காக சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது வீடு திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்த ஷகிலா, நீண்ட நேரம் ஒரே நிலையில் படுத்தபடி செல்போனில் விளையாட்டுகள் விளையாடியதாகக் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ரீல்ஸ்களை தொடர்ந்து பார்ப்பது தனது வழக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.தொடர்ச்சியான இந்தப் பழக்கத்தால் கழுத்துப் பகுதியில் உள்ள முக்கிய நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார். வலி அதிகரித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்வே மருத்துவமனையில் மருத்துவர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இந்த சிகிச்சைக்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் அவர் தெரிவித்தார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி கழுத்துப்பட்டை அணிந்து ஓய்வில் இருக்கும் ஷகிலா, தற்போது அன்றாடச் செயல்களைக்கூட பிறரின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் பகிர்ந்துகொண்டார்.இந்த அனுபவத்தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறிய அவர், செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தினார். தேவைக்கு அதிகமாக மொபைல் போன்களைப் பயன்படுத்துவது உடல்நலப் பாதிப்புகளையும் பணச் செலவையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.மேலும், குழந்தைகளுக்கு தேவையற்ற வகையில் செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை வழங்குவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.