தூத்துக்குடியில் விதிமீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி–திருநெல்வேலி பிரதான சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முடிவைத்தானேந்தல் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்து ஆய்வுக்காக நிறுத்தப்பட்டது.பேருந்தை பரிசோதித்தபோது, அதிக சத்தம் எழுப்பும் வகையில் 6 ஏர் ஹாரன்கள் மற்றும் 2 ஸ்பீக்கர் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், அரசின் விதிமுறைகளுக்கு முரணாக பேருந்தின் வெளிப்புறத்தில் வண்ணப்பூச்சு செய்யப்பட்டிருந்ததுடன், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களும் கண்டறியப்பட்டன.இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துக்கு போக்குவரத்து போலீசார் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஒரே பேருந்துக்கு இவ்வளவு உயர்ந்த தொகையில் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.