துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்: வாலிபர் கைது
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த வாலிபர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர்.இந்த நிலையில், துபாயில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர்.பாதுகாப்பு படையினர் கேட்ட கேள்விகளுக்கு அந்த வாலிபர் முறையாக பதிலளிக்கவில்லை.
இதனால் சந்தேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவரை சோதனையிட்டனர். அப்போது அவரது வாயில் துப்பாக்கிக் குண்டு வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 தங்கத் துண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து 2 தங்கத் துண்டுகளையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து, அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முகமது சிராஜ் என்பது தெரியவந்தது.துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த முகமது சிராஜ், சுங்கத்துறை சோதனையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் 2 தங்கத் துண்டுகளையும் வாயில் மறைத்தபடி விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியுள்ளார்.அவரிடம் இருந்து மொத்தம் 82 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட முகமது சிராஜ் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.