தீபாவளி பண்டிகை வரும் 8-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தீபாவளியை குடும்பத்தினருடன் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் நாளை முதல் பயணத்தைத் தொடங்க உள்ளனர். பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், அவற்றுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பலர் விமானப் பயணத்தைத் தேர்வு செய்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நாளைய பயணத்திற்கான சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.17,363 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மதுரைக்குச் செல்ல ரூ.10,700-ம், திருச்சிக்குச் செல்ல ரூ.12 ஆயிரமும், சேலத்திற்குச் செல்ல ரூ.12,769-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை செல்லும் விமானங்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதிகபட்சமாக ரூ.19 ஆயிரமாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு நாளை மறுநாளான 7-ந்தேதியும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்திருந்தாலும், சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் அதிக விலையையும் பொருட்படுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் நாளைய விமானப் பயணங்களுக்கு ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதே நேரத்தில், சென்னையில் இருந்து ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் ஏற்படவில்லை.