தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக மொத்தம் 15,901 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். வரும் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் இருந்து நவம்பர் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வழக்கமான 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். இதில் 1,659 பேருந்துகள் தனியார் ஒப்பந்தப் பேருந்துகளாகும். மூன்று நாட்களையும் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் 1,241 தனியார் ஒப்பந்தப் பேருந்துகளும் அடங்கும். இரண்டு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆயுதபூஜை பண்டிகையின்போது பயணிகள் தெரிவித்த குறைகள் மற்றும் கோரிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக கவனத்திற்கு வந்ததாகவும், அவற்றின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பயணங்கள் சிரமமின்றி அமைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது தீபாவளி பயணத்திற்கான ஏற்பாடுகளிலும் பயணிகளின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிக கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இனியும் இதுபோன்ற புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆயுதபூஜையின்போது தற்காலிக பேருந்து நிலையங்களில் மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தவிர்க்கும் வகையில், இந்த முறை மரப்பலகைகளைப் பயன்படுத்தி ஒன்றரை அடி உயரத்தில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் அமர்வதற்கான இருக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செல்போன் சிக்னல் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க, கடந்த ஆயுதபூஜையின்போது தற்காலிக சிக்னல் பூஸ்டர் கோபுரம் அமைக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்ததால், தீபாவளி காலத்தில் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று தற்காலிக சிக்னல் பூஸ்டர் கோபுரங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து சேவை மற்றும் புகார்களுக்கான தொலைபேசி எண்கள்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்க விவரங்களை அறிந்துகொள்ளவும், சேவை தொடர்பான குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கவும் 94450 14436 என்ற எண்ணையும், 149 என்ற கட்டணமில்லா எண்ணையும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 93848 08333 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு உதவுவதற்காகப் பல்வேறு இடங்களில் 'மே ஐ ஹெல்ப் யூ' தகவல் மையங்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.