திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை வாகனத்தில் எடுத்துச் சென்ற கொள்ளை வழக்கில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை ஆவடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளவேடு பகுதியில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வெள்ளவேடு கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட வங்கியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.12 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
Advertisement
இந்த நிலையில், நேற்று இரவு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சமீம் (30), ஷாபாகான் மற்றும் ரசூல் என்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு வேன் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்துச் சென்று, வாகனத்தில் கடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இந்த கொள்ளை கும்பலுக்கு பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபர் யார், மேலும் யாருக்கெல்லாம் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை அழைத்து வரும் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பின்னர், போலீஸ் காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.