தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனது உயிரையே தியாகம் செய்தவர் சங்கரலிங்கனார் எனக் குறிப்பிட்டுள்ளார். தனது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், போராட்டக் களத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisement
சங்கரலிங்கனாரின் போராட்டத்தையும் தியாகத்தையும் அன்றைய ஆட்சியாளர்கள் ஏற்காத நிலையில், முதன்முறையாக திமுக ஆட்சி அமைந்தபோது பேரறிஞர் அண்ணா தமிழகத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி அவரது தியாகத்தைப் போற்றியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் பெயர் நிலைத்திருப்பதைப் போலவே தியாகி சங்கரலிங்கனாரின் புகழும் தியாகமும் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.