முகப்பு›தமிழ்நாடு›திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையி…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்: ஸ்டாலின் எதிர்ப்பு மீனவர்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அரசு எடுத்துள்ள முடிவு கண்டனத்துக்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்ணா அறிவாலயத்தில் தன்னை சந்தித்து ஆதரவு கோரியதாகவும் அவர் கூறியுள்ளார். பட்டினப்பாக்கம் திட்டத்துக்கு எதிராக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும், அரசு தனது முடிவை திரும்பப் பெறும் வரை மீனவர்களுக்கு துணையாக நிற்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பல்வேறு இடங்கள் இருக்கும்போது, பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் தலைமைச் செயலக பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் இருப்பதாகவும், அங்கு தற்போது செயல்படும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றி மீண்டும் தலைமைச் செயலகமாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் அலுவலகம் கடற்கரையை நோக்கி அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் கூறியதன் அடிப்படையிலேயே பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒருவரின் விருப்பத்துக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள், போக்குவரத்து நெரிசல் குறித்தும் எதிர்ப்பு தலைமைச் செயலகத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் ஏராளமான பள்ளிகள் இருப்பதாகவும், அந்தப் பகுதி ஏற்கெனவே கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திட்டமிடப்பட்டுள்ள இடத்தின் தெற்குப் பகுதியில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களும், வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளும் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். "முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" தற்போதைய ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பட்டினப்பாக்கம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அரசு தனது முடிவில் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவும் மீனவர்களின் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மீனவர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுவதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், அப்பகுதியில் மீனவர்களுக்கு குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டால், மீனவர்களுடன் இணைந்து திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.