த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை
கொளத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையின் சமீபத்திய கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வி.எஸ். பாபுவுக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே, வி.எஸ். பாபுவின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மூச்சுத் திணறல் காரணமாக செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் வி.எஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில், பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், மருத்துவத் தேவைக்கு ஏற்ப அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சுவாசக் கருவியின் உதவியுடனும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.