Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? – மாணிக்கம் தாகூர் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? – மாணிக்கம் தாகூர் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்களில் தி.மு.க. பங்கேற்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தி.மு.க., தற்போது இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமை தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சியினர் டெல்லியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தை நோக்கிய பேரணி மற்றும் தேர்தல் ஆணையருக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்திய போராட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் போராட்டங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே, எம்.ஏ. பேபி, டி. ராஜா, திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை பா.ஜ.க.வைப் பாசிசக் கட்சி என விமர்சித்து வந்த தி.மு.க.விலிருந்து ஒருவர் கூட இந்தப் போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்? நாடாளுமன்றத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து அதன் தலைமை விளக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 6-ல் நாடாளுமன்றத்திலிருந்து பேரணி நடைபெற்றது. அக்டோபர் 7-ல் ஜன்பத் முதல் ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தப்பட்டது. அக்டோபர் 8-ல் ராஜ்காட்டில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் 9-ல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டதுடன், குடியரசுத் தலைவரையும் சந்தித்தனர். அக்டோபர் 10-ல் சி.ஜே.பி. அமைப்பும், அக்டோபர் 11-ல் இடதுசாரி அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அக்டோபர் 12-ல் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டு போராட்டமும் நடைபெற்றது. இத்தனை நிகழ்வுகள் நடந்தும் தி.மு.க.வின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்காததற்கான காரணம் என்ன? பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருப்பதால், அதை எதிர்ப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் தி.மு.க.

Advertisement
தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதா? வகுப்புவாதத்துக்கு எதிரான தனது கொள்கையிலிருந்து விலகிவிட்டதா? பா.ஜ.க.வை மக்கள் விரோதக் கட்சி எனக் கடுமையாக விமர்சித்தவர்கள், தற்போது அமைதியாக இருப்பது ஏன்? இதுகுறித்து கேள்வி எழுப்பும்போது தனிநபர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பது அரசியல் நாகரிகமா என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கேள்வி நேரடியானது. மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் தி.மு.க., தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், அதில் ஏன் பங்கேற்கவில்லை என்பதை விளக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் தனது உரையின் இறுதியில், “சனாதனம் ஒழிக” என்று முழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த கூட்டத்தொடரில் அந்த முழக்கம் இடம்பெறாதது ஏன் என்றும், சட்டமன்றத்தில் முழக்கம் எழுப்பிவிட்டு, பின்னர் அமைதியாக இருப்பதும், போராட்டக் களத்தில் மௌனம் காப்பதும், முரசொலியில் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவதும்தான் தி.மு.க.வின் அரசியல் அணுகுமுறையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி, அமித்ஷா ஆகியோருக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உண்மையாக இருந்தால், அதன் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்க வேண்டாமா என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், பா.ஜ.க. தலைவர்களுடன் தி.மு.க.வுக்கு ஏதேனும் அரசியல் புரிதல் உள்ளதா, இரு தரப்புக்கும் இடையே திரைமறைவில் ஒப்பந்தம் ஏதேனும் இருக்கிறதா அல்லது இதற்குப் பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா என்பதையும் தி.மு.க. தலைமை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் அரசியல் ரீதியாக வளர முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகத் தேர்தலுக்கு முன்பு கூறிய தி.மு.க., தற்போது அக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படத் தயாராகிவிட்டதா என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை. தி.மு.க.வின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை உருவாக்குவதால், அதற்கான விளக்கத்தை அக்கட்சியின் தலைமை அளிக்க வேண்டும். காங்கிரஸைத் தரக்குறைவாக விமர்சிப்பதை விடுத்து, எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு தி.மு.க. தலைமை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு