தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை: 344 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில்,காவல்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று (நவம்பர் 3) ஒருங்கிணைந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. ஒரே நாளில் நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையில், 344 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 242.2 கிலோ கஞ்சா, 19.8 கிலோ ஹஷிஷ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனையை முற்றிலும் ஒழிக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருட்களின் புழக்கம் பொதுமக்களின் உடல்நலம், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, சட்ட நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கடந்த நவம்பர் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் ஒருங்கிணைந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநரின் மேற்பார்வையில், சென்னை அமலாக்கப் பணியகம் ஒருங்கிணைப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களிலும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 1985 (NDPS Act), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. 344 பேர் கைது; 242 கிலோ கஞ்சா பறிமுதல் இந்த நடவடிக்கையின்போது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 64 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 44 பிடியாணைகளும் நிறைவேற்றப்பட்டன. மொத்தம் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 344 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 242.2 கிலோ கஞ்சா, 19.8 கிலோ ஹஷிஷ், 12.298 கிலோ இதர போதைப்பொருட்கள் மற்றும் 2,143 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் உள்ள பாசியம்மன் கோவில் அருகே 19.8 கிலோ ஹஷிஷ் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக திருவாடானை அருகே தளிர்மருங்கூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சேவியரின் மகன் மனோ (34) கைது செய்யப்பட்டார். கல்வி நிறுவனங்கள் அருகே தீவிர கண்காணிப்பு மாநிலம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகமாக இருக்கக்கூடிய 3,242 இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 1,367 இடங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருப்பது தெரியவந்தது. இந்தப் பகுதிகள் அனைத்திலும் சிறப்புக் குழுவினர் சோதனைகளை மேற்கொண்டனர். மேலும், அரசு, தனியார் மற்றும் கல்லூரி நிர்வாகங்களின் கீழ் செயல்படும் 890 மாணவர் விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.