ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜுக்கு திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விளையாட்டுத் துறைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு மற்றும் விளையாட்டு கட்டமைப்புகளுக்கான முதலீடுகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நல்ல பலனை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தை 54.75 வினாடிகளில் நிறைவு செய்து புதிய சாதனை படைத்த வித்யா ராமராஜுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது திறமையை அங்கீகரித்து, ELITE பிரிவு மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வித்யா ராமராஜ், தற்போது ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த அபிநயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன் மற்றும் காமலினி உள்ளிட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட நிதியுதவியும், 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 300 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பும், விளையாட்டு வீரர்கள் உயர்ந்த நிலையை அடைய உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து தங்களது திறமைகளை மேம்படுத்தி மேலும் பல சாதனைகளை படைக்க தேவையான ஆதரவும் ஊக்கமும் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மற்றும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் உலக அரங்கில் தொடர்ந்து சாதித்து பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.