தென்காசி அருகே டீக்கடையில் இருந்து புறப்பட்ட வாலிபரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படும் 2 பேரை, அந்த வழியாகச் சென்ற போலீஸ்காரர் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்தார். இந்தச் செயலுக்காக அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி அருகே மேலகரம் தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த லட்சுமணனின் மகன் சுடலை மகாராஜா (22). மெக்கானிக்காகப் பணியாற்றி வரும் இவர், தற்போது மத்தளம்பாறை காமராஜர் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கும் மேலகரத்தைச் சேர்ந்த கார்த்திக் (19), சுடலை (20) ஆகிய இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே ஒருமுறை ஏற்பட்ட தகராறு தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று நன்னகரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திய சுடலை மகாராஜா, பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார்.
Advertisement
அப்போது அங்கு வந்த கார்த்திக், அவரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற குற்றாலம் போலீஸ்காரர் செந்தில்குமார், சம்பவத்தைக் கண்டு உடனடியாகச் செயல்பட்டார். சுடலை மகாராஜாவை வெட்டியதாகக் கூறப்படும் கார்த்திக்கையும், அவருடன் வந்த சுடலையையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். வாலிபரைத் தாக்கியவர்களைத் துணிச்சலுடன் பிடித்த போலீஸ்காரர் செந்தில்குமாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் பாராட்டினார்.