Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

டிஜிட்டல் கைது மோசடி: சூரத் அருகே 82 வயது முதியவரிடம் ரூ.2.96 கோடி பறிப்பு

டிஜிட்டல் கைது மோசடி: சூரத் அருகே 82 வயது முதியவரிடம் ரூ.2.96 கோடி பறிப்பு

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பர்டோலி பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர், ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் ஆன்லைன் மிரட்டல் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.2.96 கோடியை இழந்துள்ளார். சுமார் 20 நாட்கள் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து இந்தப் பணம் பறிக்கப்பட்டுள்ளது.பர்டோலியைச் சேர்ந்த ரமேஷ் சந்திரா (82) என்பவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு மர்ம அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். ரமேஷ் சந்திராவின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பெறப்பட்ட சிம் கார்டு மூலம் சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் முறைகேடான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.இதையடுத்து கடந்த 8-ந்தேதி, மும்பை சைபர் கிரைம் போலீசார் எனக் கூறிக்கொண்ட மற்றொரு நபர் அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டார். முதியவரை நம்ப வைப்பதற்காக மும்பை போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் போலி முத்திரைகள், கையெழுத்துகள் இடம்பெற்ற நீதிமன்ற உத்தரவு நகல்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பினர்.அந்த போலி ஆவணங்களில், முதியவரின் வங்கிக் கணக்குகள் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும், அவரை உடனடியாக கைது செய்வதற்கான பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும், விசாரணை நிறைவடையும் வரை யாருடனும் பேசக்கூடாது என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் மோசடி கும்பல் உத்தரவிட்டது. 24 மணி நேரமும் வீடியோ காலில் தங்களது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், இந்த விவரத்தை யாரிடமாவது தெரிவித்தால் அவருக்கும் குடும்பத்தினருக்கும் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் மிரட்டினர்.இதனால் அச்சமடைந்த ரமேஷ் சந்திரா, சுமார் 20 நாட்கள் தனது அறையிலேயே இருந்துள்ளார்.இதற்கிடையில், கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கும் வங்கிக் கணக்குகளை சரிபார்ப்பதற்கும் பணத்தை தற்காலிகமாக அரசு கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என மோசடி கும்பல் கூறியது.

Advertisement
விசாரணை முடிந்ததும் அந்தப் பணம் திருப்பித் தரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதனை நம்பிய முதியவர், கடந்த 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் தனது வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் மூலம் மொத்தம் ரூ.2,96,01,000 தொகையை மோசடி கும்பல் தெரிவித்த வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.அவரிடம் இருந்த பணம் முழுவதும் தீர்ந்த பிறகும் கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் வங்கியில் வைத்திருந்த நிரந்தர வைப்பு நிதியை எடுக்க பர்டோலியில் உள்ள வங்கி கிளைக்கு முதியவர் நேரில் சென்றார்.அப்போது அவரது பதற்றமான நடவடிக்கையையும், அதிக தொகையை அவசரமாக எடுக்க முயன்றதையும் கவனித்த வங்கி மேலாளர் சந்தேகமடைந்தார். அவர் அக்கறையுடன் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை முதியவர் விளக்கினார். அப்போதுதான் அவர் சிக்கியிருப்பது ‘டிஜிட்டல் கைது’ மோசடி என்பதை வங்கி மேலாளர் எடுத்துக்கூறினார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் சந்திரா, நேற்று (செவ்வாய்க்கிழமை) சூரத் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையிலும், மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கண்டறியும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு