தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான விஜய் நடித்த இறுதி திரைப்படமாக வெளியாகியுள்ள **‘ஜனநாயகன்’**, பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் அவரது முதல் திரைப்படமும், நடிகராக அவர் நடித்த கடைசி படமும் என்பதால், விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.பட வெளியீட்டை முன்னிட்டு நேற்று (22.07.2026) இரவு முதலே பல்வேறு திரையரங்குகள் முன்பு பேனர்கள், பட்டாசுகள், டிஜே இசை உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ரசிகர்கள் திருவிழா சூழலை உருவாக்கினர். இதற்கிடையில், முதல்-அமைச்சர் விஜய் நேற்று இரவு சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்படக் கல்லூரியில் இந்தப் படத்தைப் பார்த்தார். இன்று காலை சுமார் 9 மணியளவில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டது.இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் முகமது பர்வேஷ், புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்தார்.
Advertisement
படத்தின் தொடக்கத்தில் விஜய் திரையில் அறிமுகமாகும் காட்சிகளையும், கடந்த 30 ஆண்டுகளாக அவர் நடித்த திரைப்படங்களின் தொகுப்பாக இடம்பெற்ற காட்சிகளையும் கண்ட அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். அவர் தேம்பித் தேம்பி அழுத சம்பவம் அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்ததாக கூறப்படுகிறது.அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான முகமது பர்வேஷ், அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய் ரசிகர் மன்றத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளை வகித்திருந்தார். அமைச்சர் திரைப்படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, அதுகுறித்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.