சென்னை ஐகோர்ட்டில் புதிதாக இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 75 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 66 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், 9 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக இருந்த டி. லிங்கேஸ்வரன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய பி. கார்த்திகேயன் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இருவருக்கும் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.
Advertisement
தர்மாதிகாரி விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கிடையே, புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், நீதியின் மாண்பையும் அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களையும் பாதுகாக்கும் பொறுப்புடன், சிறந்த மரபுகளையும் கண்ணியத்தையும் கொண்ட சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் அவர்களது பணி சிறப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.