சென்னையில் 1,000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்காகக் கோரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. போதிய நிறுவனங்கள் பங்கேற்காததும், ஒப்பந்தத்தால் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதும் இதற்குக் காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த விதிகளில் மாற்றங்கள் செய்து மீண்டும் டெண்டர் வெளியிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மின்சாரப் பேருந்துகளை இயக்கி வருகிறது. தற்போது 310 ஏ.சி. வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளும், ஏ.சி. வசதியில்லாத 400 மின்சாரப் பேருந்துகளும் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. ஒப்பந்தப்படி, பேருந்துகளைத் தனியார் நிறுவனங்கள் இயக்குவதுடன், அதற்கான கட்டணத்தைப் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. ஒவ்வொரு பேருந்தும் தினமும் 200 கி.மீ. தூரம் இயக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனையாகும். இதற்காக, ஏ.சி. பேருந்துகளுக்கு ஒரு கி.மீட்டருக்கு ரூ.80.82-ம், ஏ.சி. வசதியில்லாத பேருந்துகளுக்கு ரூ.77.12-ம் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது.
Advertisement
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 12 மீட்டர் நீளமுள்ள 1,000 தாழ்தள மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. போதிய நிறுவனங்கள் விண்ணப்பிக்காததால், டெண்டர் திறக்கும் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று டெண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே பங்கேற்றதால் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜெர்மனி வங்கியின் நிதியுதவியுடன் பேருந்துகளை வாங்குவதற்கான தற்போதைய ஒப்பந்த நடைமுறை நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒப்பந்தத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய டெண்டரை விரைவில் வெளியிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். புதிய நடைமுறையில், தனியார் நிறுவனங்களே மின்சாரப் பேருந்துகளை வாங்கி இயக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றவும், அவற்றின் இயக்கத்திற்காக அரசுத் தரப்பிலிருந்து ஒரு கி.மீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வழங்கும் முறையைப் பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.