கோவை மாநகராட்சியில் 132 டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா? நிர்வாகம் பரிசீலனை
கோவை மாநகராட்சியில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 100 வார்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள டெண்டர்கள் வெளியிடப்பட்டிருந்தன. இத்திட்டங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக அனுமதி (A Sanction) வழங்கப்பட்டிருந்தாலும், கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் மூலம் வழங்கப்பட வேண்டிய இறுதி ஒப்புதல் (C Sanction) இதுவரை பெறப்படவில்லை.
இதன் காரணமாக, மாநகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், போர்வெல் அமைத்தல், பொதுக் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. மொத்தம் 132 டெண்டர்கள் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாததால் குழப்பம் நீடிக்கிறது.இதற்கிடையில், நகரின் பல பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர்கள் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு மாநகராட்சி பொறியாளர்களுடன் இணைந்து வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகளை ஆய்வு செய்து, அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
நிர்வாக அனுமதி கிடைத்த பின்னரும் பணிகள் தொடங்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை என்றும், சில திட்டங்கள் ரத்து செய்யப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த தகவலும் தெளிவாக இல்லை என்றும், பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.ஒப்பந்ததாரர்கள் தரப்பில், பழைய திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டதா என்பது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும், அடுத்த கட்டமாக மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது பற்றியும் தெளிவில்லை என்றும் தெரிவித்தனர்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் விளக்கமளிக்கையில், மாநகராட்சியின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு டெண்டர்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், கிடைக்கும் நிதி மற்றும் அத்தியாவசியத் தேவைகளின் அடிப்படையில் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினர்.