கோவை மாணவர் கொலை வழக்கு: உண்மையை மாற்றி சித்தரிக்க வேண்டாம்; உதயநிதி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
சென்னை: கோவையில் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இது போதைப்பொருளுடன் தொடர்புடைய வழக்கு அல்ல என்றும், மாணவர்களுக்கிடையேயான முன்விரோதமே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழக்கின் உண்மை நிலையை மாற்றும் வகையில் கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கடந்த ஒரு வாரத்தில் மாநிலம் முழுவதும் பல கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். கோவையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இந்த விவகாரத்தை சட்டசபையில் எழுப்பியபோது, இது குழுக்களுக்கிடையேயான மோதல் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்ததாக உதயநிதி கூறினார். இருப்பினும், பலர் இணைந்து ஒருவரை தாக்கி கொன்றிருப்பதால், இது ஒரு கொலைச் சம்பவமாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், விசாரணைக்காக அமுதனை செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் போதைப்பொருள் கும்பல் தொடர்பான தகவல்களை கேட்டதாகவும், பின்னர் அந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட கும்பலினரிடம் பகிர்ந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுவே அமுதனின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அவரது பெற்றோரும் கூறியிருப்பதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், அமுதன் கொலை வழக்கை போதைப்பொருள் தொடர்பானதாக சித்தரிப்பது தவறானது என்று தெரிவித்தார்.அவர் அளித்த விளக்கத்தில், கடந்த 10-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், கோவையில் உள்ள கல்லூரி மாணவர் அமுதன் தங்கியிருந்த அறைக்குச் சென்ற அதே கல்லூரியில் படித்து வந்த சில மாணவர்கள், முன்விரோதம் காரணமாக அவரை தாக்கியதாகக் கூறினார்.காயமடைந்த அமுதன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அதே நாளில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டமும் சேர்க்கப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமுதனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேபோல், சக மாணவர்களை தாக்கியதாக அமுதன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காவல்துறையின் விசாரணையில், ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பழிவாங்கும் நோக்கிலான தாக்குதல்தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் விளக்கமளித்தார்.இந்த வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக எந்தப் புகாரிலும் குறிப்பிடப்படவில்லை என்றும், காவல்துறையின் விசாரணையிலும் அதுபோன்ற எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற பழிவாங்கும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.போதைப்பொருள் தொடர்பான தகவல்களை போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவித்ததால்தான் இந்தக் கொலை நடந்தது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சர் மறுத்தார்.இந்த வழக்கு முழுமையாக மாணவர்களுக்கிடையேயான முன்விரோதத்தின் விளைவாக ஏற்பட்டது என்றும், இதை போதைப்பொருள் சம்பவமாக மாற்றி சித்தரிக்கக் கூடாது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் வலியுறுத்தினார்.