தமிழகத்தில் குறிப்பிட்ட கோவில்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து சமய அறநிலையத்துறை தளர்த்தியுள்ளது. இதன்படி, பக்தர்கள் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம். இருப்பினும், புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுக்க அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தடை அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவின்படி, கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்து வந்தனர். தரிசனத்துக்கு முன்பு செல்போனை ஒப்படைக்கவும், பின்னர் திரும்பப் பெறவும் தனித்தனியாக வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன், பல்வேறு சிரமங்களையும் சந்தித்தனர்.
Advertisement
இதையடுத்து, செல்போன் தடையை நீக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். செல்போன்களைப் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், பக்தர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு செல்போன் தொடர்பான கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பக்தர்கள் தங்களது செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம். ஆனால், அவற்றை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், கோவில் சிலைகள் மற்றும் பூஜைகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் தொடர்ந்து தடை நீடிக்கிறது. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காகவும் இத்தகைய காட்சிகளைப் பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.