திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் மலைப்பாதையில் கார் ஒன்று சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்தது. அடுக்கம் மலைப்பாதையின் குறுகலான வளைவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, எதிர்திசையில் மற்றொரு வாகனம் வந்துள்ளது. அந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்தை நேரில் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், உடனடியாக காவல்துறையினருக்கும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பள்ளத்தில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டனர்.
Advertisement
பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அடுக்கம் மலைப்பாதையில் குறுகலான சாலையும் செங்குத்தான வளைவுகளும் இருப்பதால், வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் குறைந்த வேகத்தில் பயணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, விபத்து தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.