சென்னை மயிலாப்பூர் 125-வது வார்டில் உர்பசர் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளராக மோகன் காந்தி பணியாற்றி வருகிறார். இவர் குப்பையில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு, அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. மயிலாப்பூர் சித்ரா குளம் அருகே சாலை தெருவைச் சேர்ந்த ரமா, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளார். அப்போது சிலைக்கு 7 பவுன் தங்கச் சங்கிலியை அணிவித்திருந்தார். பூஜைகள் முடிந்த பிறகு, கவனக்குறைவால் அந்த நகை குப்பையுடன் சேர்ந்து சென்றுவிட்டது. வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மோகன் காந்திக்கு, குப்பையில் தங்கச் சங்கிலி கிடைத்தது. உடனடியாக இதுகுறித்து மேனேஜர் ஆண்டனி மணிமாறன், யூனிட் ஆபிசர் கமலக்கண்ணன் மற்றும் சூப்பர்வைசர் அருள் வல்லரசு ஆகியோரிடம் தகவல் தெரிவித்தார்.
Advertisement
சங்கிலியின் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்குமாறு அவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, மோகன் காந்தி மீண்டும் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் விசாரித்தார். அப்போது ரமா, நகைக்கான உரிய ஆவணங்களுடன், விநாயகர் சிலைக்கு அந்த சங்கிலி அணிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் காண்பித்தார். இதன் மூலம் அந்த நகை தன்னுடையது என்பதை அவர் உறுதி செய்தார். இதையடுத்து நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து மோகன் காந்தி, 7 பவுன் தங்கச் சங்கிலியை ரமாவிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார். குப்பையில் கிடைத்த விலைமதிப்புள்ள நகையை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் சேர்த்த மோகன் காந்தியின் செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இந்த நிகழ்வின்போது மோகன் காந்தியின் மனைவி ஜெயா மற்றும் மகள்கள் தேன்மொழி, நிலா ஆகியோரும் உடனிருந்தனர்.