காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு: ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், கர்நாடக அணைகளில் தற்போது 78 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்ட நீர் வந்துள்ள போதிலும், முந்தைய பற்றாக்குறையை ஈடுசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.இதற்கு கர்நாடக அரசு தரப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாகவும், நீர் பங்கீட்டில் தங்கள் தரப்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.