கோயம்பேடு பேருந்து நிலையத்தை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அடிப்படையில் புனரமைத்து, மீண்டும் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
சென்னையில் பாரிஸ் கார்னர் பேருந்து நிலையம் மற்றும் கொத்தவால்சாவடி மொத்த காய்கறி சந்தையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கோயம்பேட்டில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த நிலையம், தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்பெறும் வகையில் 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டதாகவும், அதே பகுதியில் சென்னை மொத்த காய்கறி சந்தையும் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் விரைவு பேருந்துகள் கோயம்பேட்டிலேயே நிறுத்தப்பட்டதால், அங்கிருந்து மாநகரப் பேருந்துகள் மூலம் மக்கள் நகரின் பல பகுதிகளுக்கு எளிதில் சென்றதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் வசதி ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதும் போக்குவரத்து நெரிசல் குறைய உதவியதாகவும், ஆம்னி பேருந்துகளுக்கும் தனி வசதி ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.பின்னர் கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை தனது தலைமையிலான அரசு உருவாக்கியதாகவும், 2019 பிப்ரவரி 22ஆம் தேதி அதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதிமுக ஆட்சியில் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கம், மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு கோயம்பேடு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அந்த முறை சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.ஆனால், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்த திட்டங்களை மாற்றியமைத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் செயல்பாட்டை பாதித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023 டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டபோதும், சென்னையின் பொதுப் போக்குவரத்து வசதிகளை முழுமையாக மேம்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கான பேருந்துகளை அங்கிருந்து இயக்கியதால், சென்னை மக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.இதன் விளைவாக கோயம்பேடு பேருந்து நிலையம் தனது முக்கியத்துவத்தை இழந்து பராமரிப்பின்றி சீரழிந்துவிட்டதாகவும், அந்த நிலத்தை தனியாருக்கு வழங்க திமுக அரசு முயன்றபோது அதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும், அதன் பின்னரும் நிலைய வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது இரவு நேரங்களில் அங்கு மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும், சாலைகள் சேதமடைந்துள்ளதுடன் போதிய மின் விளக்குகள் இல்லாததால் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாகவும் அவர் கூறினார். புதிய அரசு அமைந்த பின்னரும் அங்கு நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்க காவல்துறை போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்மேலும், கடந்த திமுக ஆட்சியில் இருந்ததைப் போலவே தற்போதைய த.வெ.க. கூட்டணி அரசும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக கூறிய அவர், அத்தகைய திட்டம் இருந்தால் அதை உடனடியாக கைவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.இறுதியாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் புதுப்பித்து, அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டபடி மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளை மீண்டும் அங்கிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.