Skip to main content
🌤️ —°C
சனி | 22 ஆகஸ்ட் 2026 | 6 ஆவணி பராபவ வருடம்

“கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்; அதை சிறப்பாகச் செய்வோம்!” – மு.க.ஸ்டாலின்

“கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்; அதை சிறப்பாகச் செய்வோம்!” – மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “வெற்றியையும் பார்த்திருக்கிறோம்; தோல்வியையும் சந்தித்திருக்கிறோம். தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்துள்ளோம்; நிரந்தரமாக அல்ல. இந்தக் காலத்தை கட்சியின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்வோம்” என்றார்.தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கட்சி வலிமையுடன் இருப்பதற்கு அதன் அமைப்பு முறையே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார். கட்சியின் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அதில் ஒன்றாக இருப்பதை மறைக்கத் தேவையில்லை என்று ஸ்டாலின் தெரிவித்தார். தனிநபர்களின் தவறுகளால் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இயக்கமே பாதிக்கப்படுவதால், முதலில் கட்சிக்குள் உள்ள குறைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.தோல்விக்குப் பிறகு தொகுதி வாரியாக நிர்வாகிகளை மாற்றுவதைக் காட்டிலும், முழுமையான சுய பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்ததாக அவர் கூறினார். இதன் அடிப்படையில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், சில மாற்றங்கள் கடுமையாகவும், சிலருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.தேர்தல் தோல்விக்குப் பின்னர் 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துகள் பெறப்பட்டதாக ஸ்டாலின் கூறினார். இதனுடன், தனியாக இணையதளம் மூலம் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடமிருந்து பல்வேறு கருத்துகளும் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, தங்கம் தென்னரசு தலைமையில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழு பல நாட்கள் ஆய்வு செய்து இடைக்கால அறிக்கையை அளித்ததாகவும் அவர் கூறினார். தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இளைஞர்கள் மற்றும் பெண்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் கட்சியின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் வழங்கப்படும் பொறுப்புகளுக்கு ஏற்ப வயது வரம்பும், பதவிக்காலமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.உறுப்பினர் சேர்க்கையை விரைவில் தொடங்கி, அது நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்பிறகு அனைத்து மட்டங்களிலும் உட்கட்சித் தேர்தல்கள் முறையாக நடத்தப்படும் என்றும், தகுதியான புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் பொறுப்புக்கு வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.கட்சியை மறுசீரமைப்பதன் மூலமே மீண்டும் அரசியல் வெற்றியைப் பெற முடியும் எனக் கூறிய அவர், அதற்காக விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
Advertisement
மாற்றத்துக்கு தயாராகும் மனநிலை முதலில் கட்சியினரிடம் உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.கொள்கை, உழைப்பு மற்றும் போராட்டக் குணத்தில் வலிமையாக இருப்பவர்கள் கூட கட்சி நிர்வாகிகளை அரவணைப்பதில் சில நேரங்களில் தவறிவிடுவதாக ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார். எதிர்க்கட்சியினருக்கு அளிக்கும் மரியாதையை சொந்தக் கட்சியினருக்கும் வழங்க வேண்டும் என்றும், ஒரே நபரை மட்டுமே சார்ந்து ஒரு மாவட்டத்திலோ தொகுதியிலோ கட்சியை வளர்க்க முடியாது என்றும் கூறினார்.ஒவ்வொரு தொண்டரும் நிர்வாகி என்ற உணர்வுடன் செயல்பட்டால்தான் இயக்கம் வலுப்பெறும் என அவர் தெரிவித்தார். புதிய தலைமுறையினருக்கு மூத்தவர்கள் வழிகாட்டி, அவர்களை அரவணைத்து வளர்ப்பதே வலுவான அமைப்பின் அடையாளம் என்றும் கூறினார்.தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்காக உழைக்காமலும், போராட்டங்களை முன்னெடுக்காமலும், கொள்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமலும் ஆட்சிக்கு வந்துள்ளதாக ஸ்டாலின் விமர்சித்தார். தி.மு.க. அதுபோன்ற பாதையை பின்பற்றக் கூடாது என்றும் அவர் கூறினார்.வெற்றி, தோல்வி ஆகியவற்றால் மட்டும் இயக்கத்தின் பயணம் முடிவதில்லை என்றும், தேர்தலில் தோற்றுவிட்டால் அடுத்த தேர்தல் வரை அமைதியாக இருப்பது தி.மு.க.வின் நடைமுறை அல்ல என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் கட்சியாக தி.மு.க. இருக்க வேண்டும் என்றார்.“கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட். அதை சிறப்பாகச் செய்வோம்” என்று கூறிய ஸ்டாலின், கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது தங்களுக்கு வாக்களிக்காதவர்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை வழங்குவோம் என கூறியதை நிறைவேற்றியதாக தெரிவித்தார். தற்போது தோல்வியடைந்த நிலையிலும், தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் போராடுவோம் என்றும், அவர்களின் நலனுக்காக துணை நிற்போம் என்றும் கூறினார். கட்சியினர் முதலில் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அரசியல் கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், பின்னர் அக்கம்பக்கத்தினரிடமும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.முதலமைச்சர் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும், சட்டப்பேரவையில் சினிமா பாணியில் வசனங்களைப் பேசுவதாகவும் அவர் விமர்சித்தார்.தி.மு.க.வைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து செயல்படுவதே முக்கியம் என்று ஸ்டாலின் கூறினார். இனமும், மொழியும், நாடும் இருக்கும் வரை கருப்பு-சிவப்புக் கொடி பறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சியினர் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.அண்ணா உருவாக்கிய இயக்கத்தையும், கலைஞர் வளர்த்த இயக்கத்தையும் மேலும் வலிமையானதாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு