கும்பாபிஷேக பாதுகாப்பு பணி: போலீசார் தங்குவதற்காக மதுரையில் 24 பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர். விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6,500 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் மதுரைக்கு வந்துள்ளனர். பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாரை தனியார் மண்டபங்களில் தங்க வைப்பதற்கான போதிய ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில், மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி விளக்குத்தூண் அவ்வையார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திலகர்திடல் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி, வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி பஜார் தொழிலாளர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 24 பள்ளிகள் போலீசாருக்கான தங்குமிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன.