கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியப் பொறுப்பாளர் கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்துள்ளனர். தக்கலை பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான கிறிஸ்டோபர், கடந்த 20-ம் தேதி குலசேகரம் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக மழையில் பேருந்துக்காக காத்திருந்த இரண்டு மாணவிகளுக்கு காரில் அழைத்துச் செல்வதாகக் கூறி உதவியுள்ளார். முதலில் ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், மற்றொரு மாணவியை காரில் தொடர்ந்து அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில் காரை நிறுத்தி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு காரில் இருந்து வெளியேற முயன்றுள்ளார். இதையடுத்து அவரை நடுவழியில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Advertisement
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கடந்த 22-ம் தேதி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த கிறிஸ்டோபர், கேரளாவுக்குச் சென்று தலைமறைவானார். இதையடுத்து தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்த போலீசார், நேற்று (வியாழக்கிழமை) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கிறிஸ்டோபரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், கிறிஸ்டோபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.