தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ்சில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்று மாலை 4.30 மணியளவில் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு அரசு பஸ் புறப்பட்டது. 40-க்கும் அதிகமான பயணிகள் அதில் பயணம் செய்தனர். குரும்பூர் அருகே நல்லூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள தற்காலிக சர்வீஸ் சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, ஸ்டீயரிங் அருகே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த ஓட்டுநர் தவசிமுத்து, உடனடியாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். தொடர்ந்து, பஸ்சின் இரண்டு தானியங்கி கதவுகளையும் திறந்து, பயணிகள் அனைவரையும் விரைவாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார்.
Advertisement
இதனால் பதற்றமடைந்த பயணிகள் அவசர அவசரமாக பஸ்சிலிருந்து வெளியேறினர். பயணிகள் இறங்கிய சில நொடிகளிலேயே பஸ்சில் தீ பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், தீயில் சிக்கிய பஸ் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் மாறியது. மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளை வெளியேற்றியதால், 40-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.