ஒருவர் பெறும் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்: கவர்னர் அர்லேக்கர்
கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தீக்ஷாரம்பம் 2026 அறிமுக நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அர்லேக்கர் தொடங்கி வைத்தார். 3,500-க்கும் அதிகமான புதிய மாணவர்கள் இதில் பங்கேற்றனர். மேலும், அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளியின் அம்ருதா லெக்ஸ் இனிஷியோ 2026என்ற முதன்மை விரிவுரைத் தொடரையும் அவர் அறிமுகப்படுத்தினார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய கவர்னர், கல்வி என்பது பட்டம் பெறுவதற்கோ அல்லது வேலைவாய்ப்பு பெறுவதற்கோ மட்டுமே அல்ல என்று வலியுறுத்தினார். கல்வியின் மூலம் பெறப்படும் அறிவுடன் அதன் பின்னணியில் உள்ள மனிதநேய மற்றும் ஒழுக்க விழுமியங்களையும் மாணவர்கள் புரிந்துகொண்டு, அவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.மேலும், 'தீக்ஷா'என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் கல்வியைத் தொடங்குவதைக் குறிக்கிறது என்றாலும், 'ஷிக்ஷா' என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல் பயணம் எனக் குறிப்பிட்டார். கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்தி, திறன், புதுமை மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் மூலம் விக்சித் பாரத் 2047 என்ற இந்தியாவின் வளர்ச்சி இலக்கை அடைய மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஒருவர் பெறும் கல்வி அவரது தனிப்பட்ட முன்னேற்றத்துடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.இதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பதிவாளர் டாக்டர் பிபின் நாயர் வரவேற்புரை வழங்கினார்.