Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் - டிரம்ப்

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் - டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அக்கட்சி கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தடுப்பேன் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. அதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றன. அதிபர் பதவிக்காலத்தின் இடையில் நடைபெறும் இந்தத் தேர்தல் இடைக்காலத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்களும், 50 மாகாணங்களில் இருந்து தலா இரண்டு பேர் வீதம் செனட் சபையில் 100 உறுப்பினர்களும் உள்ளனர். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகவும், செனட்டர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், 2025-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று சுமார் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது.

இதில் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதுதவிர, 36 மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்காளர்கள் வாக்குச்சீட்டு முறையில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்திய நேரப்படி அடுத்த நாள் காலை முதல் முடிவுகள் வெளியாகின. ஆரம்பம் முதலே ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முன்னிலை பெற்றனர். நேரம் செல்லச் செல்ல அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. இறுதியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது. இதனால், இதுவரை இரு அவைகளிலும் செல்வாக்குடன் இருந்த குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. முன்னதாக செனட் சபையில் 53-47 என்ற விகிதத்தில் பெரும்பான்மை வைத்திருந்த குடியரசுக் கட்சி, இந்தத் தேர்தலில் பல இடங்களை இழந்தது. வெளியான நிலவரப்படி ஜனநாயகக் கட்சி 53 இடங்களையும், குடியரசுக் கட்சி 42 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. மீதமுள்ள ஐந்து இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதேபோல், பிரதிநிதிகள் சபையில் 220-215 என்ற கணக்கில் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சியும் தனது ஆதிக்கத்தை இழந்தது.

Advertisement
கடைசியாக வெளியான தகவலின்படி ஜனநாயகக் கட்சி 223 இடங்களையும், குடியரசுக் கட்சி 131 இடங்களையும் வென்றிருந்தன. மேலும் 81 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகாமல் இருந்தன. கவர்னர் தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 28 கவர்னர்கள் ஜனநாயகக் கட்சியையும், 20 பேர் குடியரசுக் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இரண்டு மாகாணங்களுக்கான முடிவுகள் மட்டும் நிலுவையில் இருந்தன. இந்த இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மேலும், அமெரிக்காவின் முதல் கருப்பினப் பெண் கவர்னர், முதல் முஸ்லிம் செனட்டர் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிகழ்வுகளும் இந்தத் தேர்தலில் இடம்பெற்றன. இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்தது டிரம்புக்கும் அவரது கட்சியினருக்கும் பெரும் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக டிரம்ப் தெரிவித்தார். வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்த அவர், நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேவேளையில், எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்காவிட்டால் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் என்றும் எச்சரித்தார். இதனை வலியுறுத்தும் வகையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'வீட்டோ' என்ற வார்த்தை இடம்பெற்ற தொப்பியின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார். மறுபுறம், டிரம்பின் தேர்தல் தோல்வியை ஜனநாயகக் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். டிரம்பின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதால், டிரம்ப் அரசு இனி முக்கிய முடிவுகளை எடுப்பதில் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகிறது. அதிபரின் நிறைவேற்று ஆணைகள் மூலம் சில திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தாலும், அவற்றை நீதிமன்றத்தில் எதிர்த்து ரத்து செய்யக் கோரும் வாய்ப்பும் எதிர்க்கட்சியினருக்கு உள்ளது. மேலும், பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதால், ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவின்றி அரசு திட்டங்களுக்கான நிதியைப் பெறுவது டிரம்புக்கு சவாலாக அமையும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. சர்வதேச வர்த்தகம், வரிவிதிப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைகள் மற்றும் போர், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற விவகாரங்களிலும் நாடாளுமன்றம் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும். இதனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் மூலம் டிரம்ப் அரசுக்கு பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அவரது மீதமுள்ள இரண்டு ஆண்டுகால ஆட்சிப் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு