இந்திய கடற்படையின் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 2-வது ஆழ்கடல் மூழ்குதல் ஆதரவு மற்றும் மீட்புக் கப்பலான ‘ஐ.என்.எஸ். நிபுன்’ அதிகாரப்பூர்வமாக கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் முன்னிலையில் இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனம் இந்த கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளும் கடந்த ஜூலை 30-ம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, கடற்படையிடம் கப்பல் ஒப்படைக்கப்பட்டது. ‘நிஸ்தார்’ வகையைச் சேர்ந்த இந்த ‘ஐ.என்.எஸ்.
Advertisement
நிபுன்’ கப்பல், கடலின் ஆழமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மற்றும் சிக்கலான மீட்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, நீர்மூழ்கிக் கப்பல்கள் விபத்தில் சிக்கும்போது, அதில் இருக்கும் வீரர்களை மீட்கும் முக்கிய ஆதரவு கப்பலாக இது செயல்படும்.ஆழ்கடலில் தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இதில் தானியங்கி ரோபோ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மீட்கப்படும் வீரர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் வகையில் 8 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவ வசதி மற்றும் அறுவை சிகிச்சை அறையும் அமைக்கப்பட்டுள்ளது.அவசர காலங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதியும் இந்த கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீட்பு பணிகளில் இந்திய கடற்படையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஐ.என்.எஸ். நிபுன்’ முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.