ஈரோடு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு தொழிற்பேட்டைகள், திருப்பூர் மாவட்டத்தில் கயிறு உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது வசதி மையம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் 15 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17.95 ஏக்கர் பரப்பளவில் வேளாண் உற்பத்தி சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 47 தொழில்மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளும் தயாராக உள்ளன. இந்தத் தொழிற்பேட்டை செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் 250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் நாயனூர் கிராமத்தில் 29.44 ஏக்கர் நிலப்பரப்பில் 5 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மற்றொரு தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 105 தொழில்மனைகளைக் கொண்ட இந்தத் தொழிற்பேட்டையும் தொழில்முனைவோர்களின் பயன்பாட்டிற்காகத் தயாராக உள்ளது.
Advertisement
இதன் மூலம் 600 பேருக்கு நேரடியாகவும், 1,200 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, திருப்பூர் மாவட்டம் குண்டடம் வட்டம் முதலிபாளையத்தில் தென்னை நார் கயிறு உற்பத்தி நிறுவனங்களுக்கான பொது வசதி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 13 கோடியே 95 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்களிப்பாக 8 கோடியே 75 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 34 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுமத்தின் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட தென்னை நார் கயிறுப் பொருட்களைத் தயாரிக்கும் 500-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயனடைய உள்ளன. இதன் வாயிலாக 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 350 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாகும். இந்த மூன்று திட்டங்களையும் முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மங்கத்ராம் சர்மா, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் டாக்டர் பு. உமாநாத் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.