ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது!
தமிழகத்தில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் ஈரோடு முக்கிய இடம் வகிக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஈரோடு மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் மஞ்சள் சாகுபடி பாதியாகக் குறைந்துள்ளது. சாகுபடி குறைந்துள்ளதுடன், விவசாயிகளிடம் மஞ்சள் இருப்பும் குறைந்துள்ளதால் சந்தையில் அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. தற்போது விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய மஞ்சளை விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புதிய மஞ்சள் வரத்து அதிகமாக இருந்தபோது, ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.19,779-க்கு ஏலம் போனது.