தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆலந்தலை அருகிலுள்ள செந்தூர் நகர் கடற்கரை பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதன், ராமர் மற்றும் போலீசார் அடங்கிய குழு இன்று அதிகாலை அந்த பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த லோடு வேனை சோதனையிட்டதில், தலா 35 கிலோ எடை கொண்ட 79 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
அவை படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் குரங்கன் தட்டு பழைய தெருவைச் சேர்ந்த ராஜாவின் மகன் சூர்யா (26) கைது செய்யப்பட்டார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், லோடு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கியூ பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.