உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், மறைந்த தங்களது முன்னோர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். இதையொட்டி, முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, மலர்களால் அலங்கரிப்பது வழக்கம். தொடர்ந்து தேவாலய பங்குத்தந்தைகள் மற்றும் ஆயர்கள் தலைமையில் கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, கல்லறைகள் புனிதப்படுத்தப்படுகின்றன. இதன் பின்னர் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலிகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் மைக்கேல்பாளையத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
Advertisement
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியிலும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டது. தொண்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் அதிகாலையில் பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லறைகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது. அப்போது உறவினர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்தனர். மேலும், காரங்காடு புனித செங்கோல் மாதா திருத்தலத்தில் பங்குத்தந்தை ரெஞ்ஜீஸ் தலைமையிலும், சம்பை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பங்குத்தந்தைகள் செல்வராஜ் மற்றும் பாக்கியராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் சம்பை, கண்கொள்ளான் பட்டிணம், சின்ன மடம் தோப்பு, சோழியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.