இனி இளைஞர்களின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது: பிரியங்கா காந்தி
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, இந்திய மக்களின் விருப்பத்தை எந்த தனிநபரோ, தலைவரோ, சர்வாதிகாரியோ அல்லது எந்த சக்தியோ தடுக்க முடியாது என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:"இன்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான நாள். அரசியலமைப்பை பலவீனப்படுத்தவும், மக்களின் குரலை அடக்கவும் முயன்ற சக்திகளுக்கு எதிராக, இந்திய மக்கள் தங்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ள தருணம் இதுவாக நான் கருதுகிறேன்.இது இந்திய இளைஞர்களின் வெற்றியாகும். தாங்கள் நம்பிய கொள்கைகளுக்காக உறுதியாக நின்ற ஒவ்வொரு இளைஞரையும் நான் பாராட்டுகிறேன். மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியிலேயே அவர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.அவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. தடியடி நடத்தப்பட்டது. பலர் காயமடைந்தனர். இருப்பினும் அவர்கள் பின்வாங்கவில்லை. இறுதியில் அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தற்போதைய மற்றும் எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கியமான பாடமாகும்.ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே உயர்ந்தது. அதற்கு மேலாக எதுவும் இல்லை. எந்த தனிநபரோ, தலைவரோ, சர்வாதிகாரியோ அல்லது வேறு எந்த சக்தியோ இந்திய மக்களின் விருப்பத்தை தடுக்க முடியாது என்பதை மாணவர்களும் இளைஞர்களும் இன்று நிரூபித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியாக நாங்கள் அவர்களுக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளோம்.